.
சென்னை மக்களுக்கு 5 லாரிகளில் வாட்டர் பாட்டில் அனுப்பிய மலையாள நடிகர் திலீப்
திருவனந்தபுரம்: கனமழையால் பாதிக்கப்பட சென்னை மக்களுக்கு 5 லாரிகள் நிறைய குடி தண்ணீர் பாட்டில்களை அனுப்பி உதவி செய்திருக்கிறார் மலையாள நடிகர் திலீப்.
மழையால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் உதவிகள் செய்து வருகின்றனர். மக்களுக்குத் தேவையான உணவு, போர்வை, மருந்துகள் போன்றவற்றை நடிக, நடிகையரும் வழங்கி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் திலீப் 5 லாரிகளில் தண்ணீர் பாட்டில்களை சென்னை மக்களுக்கு வழங்கியிருக்கிறார். இது குறித்து திலீப் கூறும்போது சென்னை மக்களுக்கு தேவையான உணவுகளை அனைவரும் வழங்கி வருகின்றனர்.
ஆனால் அவர்களுக்குத் தேவையான குடிதண்ணீர் கிடைப்பது இந்த நேரத்தில் சற்றுக் கடினமானது. அதனால்தான் சென்னை மக்களுக்கு குடிதண்ணீர் அனுப்பி வைத்தேன். நான் திரையுலகில் நுழைந்தபோது சென்னை எனது கனவு நகரமாக இருந்தது. இன்று இவ்வளவு பெரிய பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கும் சென்னையைக் காணும்போது மிகவும் வேதனையாக இருக்கிறது.
சமூக வலைதளங்கள் இந்த நேரத்தில் மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கின்றன. சென்னை மக்கள் இந்த சோதனைகளைத் தாண்டி மீண்டும் இயல்பான நிலைக்குத் திரும்ப நான் மனதார வேண்டிக்கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்.